ஆரோக்கியமான விவசாய உணவு உற்பத்திக்கு இயற்கைப் பசளை தயாரிப்பதில் பயிற்சி

ad+1

இரசாயன பசளைப் பாவனையையும் இரசாயன கிருமி மற்றும் பூச்சிநாசினிகளையும் தவிர்த்து இயற்கையோடிணைந்த, சூழலுக்குப் பாதிப்பில்லாத சேதனப் பசளை தயாரிப்பது பற்றிய செயன்முறைப் பயிற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக விவசாய அமைச்சின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் கே.எல்.எம். சிறாஜுன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு விவசாயத் திணைக்கள சத்துருக்  கொண்டான் பயிற்சிப் பாடசாலையில் மட்டக்களப்பு மாவட்ட 'ரணவிரு சேவா' குடும்பங்களைச் சேர்ந்த அங்கத்தவர்களுக்கு இயற்கைப் பசளைத் தயாரிப்பு செயன்முறைப் பயிற்சிநெறி இடம்பெற்றது.

'ரணவிரு சேவா' அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட அதிகாரி ரீ.எச். கீர்திகா ஜயவர்தனவினால் மாவட்டச் செயலகத்தினூடாக விவசாய அமைச்சின் அனுசரணையுடன் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த செயன்முறைப் பயிற்சி நெறியில் இயற்கைப் பசளைத் தாக்கம், பூச்சித் தாக்கம், அவற்றைக் கட்டுப்படுத்தும் இயற்கை வழிமுறைகள், மண், நிலம், நீர், காற்று உட்பட சூழலை நஞ்சற்றதாகப் பேணி எதிர்கால சந்ததிக்கும் தூய்மையான இயற்கை உலகத்தைக் கையளிக்கும் அர்ப்பணிப்புக்கள் பற்றி தெளிவு ஏற்படுத்தப்பட்டது.

உணவு உற்பத்தி என்ற போர்வையில் நஞ்சு. இரசாயனம் கலந்த உணவுஉற்பத்திகளை நுகரும் கலாசாரத்தை விட்டு பாரம்பரிய ஆரோக்கிய வாழ்வு முறைக்குத் திரும்பும் வழிவகைகள் பற்றியும் இந்தப் பயிற்சி நெறியில் விழிப்புணர்வூட்டப்பட்டது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு உதவி மாவட்டச் செயலாளர் ஏ. நவேஸ்வரன், மட்டக்களப்பு பிரதான பொலிஸ் பரிசோதகர் தயால் தீகஹவத்துர, 231வது படைப்பிரிவு அதிகாரி கப்டன் விஜிதகுமார, விவசாய அமைச்சின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் கே.எல்.எம். சிறாஜுன்,    'ரணவிரு சேவா' அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட அதிகாரி ரீ.எச். கீர்திகா ஜயவர்தன உட்பட பயனாளிகளும் கலந்து கொண்டனர்.


0 comments: