குடும்பத் தலைவர் மீது வாள்வெட்டு! 8 பேரின் தண்டனையை உறுதி செய்தார் நீதிபதி இளஞ்செழியன்

ad+1

யாழில் குடும்பத் தலைவர் ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் எட்டுப்பேரின் தண்டனையை யாழ். மேல் நீதிமன்றம் இன்று உறுதி செய்துள்ளது.

யாழ். மடம் வீதியில் வசிக்கும் விமல்ராஜன் விக்னராஜா என்பவர் மீது கடந்த 2012ஆம் ஆண்டு ஜூலை மாதம் 5ஆம் திகதி வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.இந்த சம்பவம் தொடர்பில் 8 பேரை கைது செய்திருந்த யாழ்ப்பாணம் பொலிஸார், அவர்களுக்கு எதிராக யாழ். நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

ஐந்து ஆண்டுகளாக வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில், கடந்த மே மாதம் 16ஆம் திகதி 8 பேருக்கும் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

இதன்படி, எட்டுப்பேரில் மூவருக்கு 3 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையும், ஐந்து பேருக்கு ஓராண்டு சிறைத்தண்டனையும் விதிக்கபட்டது.

மேலும் பாதிக்கப்பட்டவருக்கு 8 பேரும் ஐம்பதாயிரம் ரூபா இழப்பீடு வழங்க வேண்டும் என யாழ். நீதவான் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்திருந்தார்.

எனினும், நீதவான் நீதிமன்ற தீர்ப்பை ஆட்சேபித்து தண்டனை பெற்ற 8 பேரினதும் சார்பில் அவர்களின் சட்டத்தரணிகள் யாழ். மேல் நீதிமன்றில் மேன்முறையீடு செய்திருந்தனர்.

இது குறித்த வழக்கு விசாரணை இன்று இடம்பெற்ற நிலையில், 8 பேரின் மேன்முறையீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பை யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் இன்று வழங்கியுள்ளார்.

“மேன்முறையீட்டாளர்களால் நீதிவான் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிலுள்ள சட்டம், நிகழ்வுத் தவறுகள் வெளிப்படுத்தப்படவில்லை. எனவே யாழ். நீதிவான் நீதிமன்றால் வழங்கப்பட்ட தீர்ப்பு நியாயமானது.

அவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையையும் மேல் நீதிமன்றம் உறுதி செய்கிறது. குற்றவாளிகளிடம் தண்டம் அறவீடு செய்வது அவசியமானது. எனினும் நீதிவான் மன்றால் கருத்திற்கொள்ளப்படவில்லை.

எனவே 8 சந்தேகநபர்களும் தலா ஆயிரத்து 500 ரூபா தண்டப் பணத்தை நீதிவான் மன்றில் செலுத்தவேண்டும்” என யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தீர்ப்பளித்தார்.

0 comments: