சவுக்கடி தாய், மகன் படுகொலை பிரதான சந்தேக நபர்களிடமிருந்து தங்க நகைகள் மீட்பு

ad+1

தீபாவளித் தினத்தன்று (18.10.2017) ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள சவுக்கடி கிராமத்தில் படுகொலை செய்யப்பட்ட இளவயதுத் தாய் மற்றும் அவரது 11 வயது மகன் ஆகியோரின் படுகொலையின் பிரதான சூத்திரதாரியெனச் சந்தேகிக்கப்படும் நபர், கடந்த ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில், அவரது சகாவான மற்றொரு நபர், நேற்றுக் கைதுசெய்யப்பட்டாரெனத் தெரிவித்த மட்டக்களப்பு தலைமையக பொலிஸார், சந்தேக நபர்களிடமிருந்து நகைகளையும் மீட்டுள்ளதாகக் கூறினர்.


நாட்டை விட்டுத் தப்பியோடும் பிரயத்தனத்தில் தலைமறைவாகியிருந்த பிரதான சந்தேகநபர், தீவிரமான தொடர்ச்சியான புலன் விசாரணைகளையடுத்து கைதுசெய்யப்பட்டாரெனவும் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணைகளின் பயனாக அவரது சகாவைக் கைதுசெய்து, கொலைசெய்யப்பட்ட பெண்ணின் உடமையான 16 பவுண் தங்க நகைகளையும் தாம் மீட்டெடுத்திருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணத்தில் நிதி நிறுவனம் ஒன்றில் அடகு வைக்கப்பட்ட நிலையில்  மீட்டெடுக்கப்பட்ட தங்க நகைகள், நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் அதிகாரிகளால் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் இன்று (01) கையளிக்கப்பட்டன.

பெண்ணையும் அவரது மகனையும் கொலை செய்து விட்டு நகைகளை அபகரித்த கொலைகாரர்கள், அவற்றை யாழ்ப்பாணத்துக்கு எடுத்துச் சென்று அடகு வைத்திருந்த நிலையில், தம்மால் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பிரதான சந்தேகநபர் பல பிரதேசங்களை மாறி மாறி தனது வசிப்பிடமாகக் கொண்டிருப்பதான தகவல் தமக்குக் கிடைத்திருந்ததாகவும் அதற்கமைவாக அவரது நடமாட்டமுள்ளதாக அறியப்பட்ட சகல இடங்களும் நோட்டமிடப்பட்டதாகவும் அதனடிப்படையிலேயே, சந்தேகநபர் சிக்கினாரெனவும் பொலிஸார் கூறினர்.

சவுக்கடி, முருகன் கோயில் வீதியைச் சேர்ந்த மதுவந்தி பீதாம்பரம் (வயது 26) மற்றும் அவரது மகனான பீதாம்பரம் மதுஷ‪ன் (வயது 11) ஆகியோரே படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.


(படம் - ஆதவன்)0 comments: