அரியாலை துப்பாக்கிச் சூடு இரு விசேட அதிரடிப்படை வீரர்கள் சி.ஐ.டியால் கைது

ad+1

16 வரை விளக்கமறியல்; அடையாள அணிவகுப்புக்கும் பணிப்பு

யாழ். அரியாலை துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸ் ​ெகான்ஸ்டபிள் மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஆகிய இருவரை சி.ஐ.டி யினர் நேற்று கைதுசெய்துள்ளனர்.


யாழ்ப்பாணம் பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமைச் சேர்ந்த மல்லவ ஆரச்சி பிரதீப் நிஷாந்த எனும் உப பொலிஸ் பரிசோதகரும் ரத்நாயக்க முதியன்சலாகே இந்திக்க புஸ்ப குமார எனும் பொலிஸ் ​ெகான்ஸ்டபிளுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.  கடந்த மாதம் 22 ஆம் திகதி அரியாலை கிழக்கு மணியம்தோட்டம் வசந்தபுரம் முதலாம் குறுக்கு வீதிப்பகுதியில் மோட்டார் சைக்கிளில் சிவில் உடையில் வந்த இருவர் துப்பாக்சிச் சூடு நடத்தியதில் 24 வயது டொன்பொஸ்கோ ரிக்மன் என்பவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

மேற்படி துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்க பொலிஸ்மாஅதிபர் பூஜித ஜெயசுந்தரவினால் 5 பேர் கொண்ட விசேட குற்றத்தடுப்பு பிரிவினர் நியமிக்கப்பட்டனர்.

யாழ்ப்பாணத்திற்கு சென்ற அக்குழுவினர் சம்பவம் நடைபெற்ற இடத்திலிருந்து தமது ஆரம்ப கட்ட விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர். துப்பாக்கிதாரிகள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி என்பவை விசேட அதிரப்படை முகாமில் இருந்ததை கண்டு பிடித்தனர்.

இரண்டாம் கட்டமாக சம்பவம் இடம்பெற்ற அந்தப்பகுதியில் உள்ள மரக்காலையில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரி.வி. காணொளியை ஆதாரமாக எடுத்துக்கொண்ட போது, துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்ட இளைஞர் அவரின் நண்பருடன் மோட்டார் சைக்கிளில் பயணிப்பதும் மற்றும் அவர்களின் பின்னால், மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டியில் விசேட அதிரப்படையின் புலனாய்வாளர்கள் பின்தொடர்வது உள்ளிட்ட காணொளியை மீட்டனர். அந்த காணொளியின் பிரகாரம், விசேட அதிரப்படையின் புலனாய்வுப் பிரிவினரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டதுடன் வாக்கு மூலத்தையும் பெற்றுக்கொண்டிருந்தனர். வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து நேற்றும் விசேட அதிரடிப்படையின் புலனாய்வுப்பிரிவின் பொறுப்பதிகாரி உட்பட 7 பேரிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

வாக்குமூலத்தின் அடிப்படையில் இருவரும் நேற்று (03) கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்ட இருவரையும் யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிபதியின் வாசஸ்தலத்தில் ஆஜர்ப்படுத்தியுள்ளனர்.

இச்சம்பவத்துடன் தொடர்புபட்ட அனைத்து தரப்புடனும் யாழ்ப்பாணத்தில் சி.ஐ.டியினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையடிப்படையிலேயே முதற்கட்டமாக மேற்படி இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தால் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்படவுள்ளதுடன் எதிருவரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கவும் யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


0 comments: