தமிழ் மக்களை ஏமாற்றாமல் அரசியல் தீர்வை முன்வையுங்கள்

ad+1

“தமிழ் மக்களை இனியும் ஏமாற்றாமல் அரசியல் தீர்வை முன் வைக்க வேண்டும்” என, 'ஈரோஸ்' எனப்படும் ஈழவர் ஜனநாயக முன்னணியின் பொதுச் செயலாளர் இராஜநாதன் பிரபாகரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு, கல்லடியிலுள்ள வொயிஸ் ஒப் மீடியா அலுவலகத்தில் நேற்று (12) இடம்பெற்ற ஊடகச் சந்திப்பின்போதே, அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தமிழ் மக்களை இனியும் ஏமாற்றக் கூடாது. தமிழத் தேசியக் கூட்டமைப்பிடம் தெளிவான போக்குக் காணப்படவில்லை.

“'ஜெனீவா பேச்சுவார்த்தையைத் தொடங்க வேண்டும், மின்சார கதிரையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை ஏற்றுவோம், யுத்தக் குற்றத்தை நிரூபித்து தண்டனையை பெற்றுக் கொடுப்போம், பின்னர் தீர்வை ஏற்படுத்துவோம், ஒரு வருடத்துக்குள் தீர்வு கிடைக்கும்' என்றெல்லாம் கூறினார்கள்  ஆனால், கிடைத்தது ஏமாற்றம் மட்டும்தான்.

“இது இவர்கள் ஒவ்வொரு தேர்தலிலும் கூறிய போலியான வார்த்தைகள். எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் எதை இவர்கள் கூறப்போகின்றார்கள்.

“மக்களை ஏமாற்றி பிழைப்பு வாத அரசியல், சுய நல அரசியல் செய்வதே, இவர்களின் இலக்காக இருக்கின்றது.

“அரசாங்கத்தின் நிழல் அரசாங்கமாக தமிழத் தேசியக் கூட்டமைப்பு இருந்து கொண்டு, மக்களை ஏமாற்றி வருகின்றது. இனியும் தமிழ் மக்களை ஏமாற்றாமல் தீர்வைப் பெற்றுக் கொடுக்க வேண்டும்.

“சுய விமர்சனம் செய்வதற்கான சந்தர்ப்பத்தை மக்களுக்கு வழங்க வேண்டும். அவ்வாறான சுய விமர்சனம் செய்வதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரும்பவில்லை.

“ஈழவர் ஜனநாயக முன்னணியான எமது கட்சி மாற்றத்துக்கான பயணத்தைத் தொடங்கியுள்ளது. மாற்றமே இன்று மக்களுக்கு தேவைப்படும் ஒன்றாக உள்ளது. மாற்றத்தை இலக்காகக் கொண்டு நாம் எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் களம் இறங்கவுள்ளோம்.

“இன்று மக்கள் படும் அசௌகரியங்கள் நமக்கு நன்கு தெரியும். இந்த அசௌகரியங்களையெல்லாம் மக்கள் சகித்துக் கொண்டே வாழ்கின்றார்கள்.

“எமது கட்சியானது, எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும், மலையகத்திலும் களம் இறங்கவுள்ளது.

“மட்டக்களப்பு மாநகர சபையில் எனது தலைமையில் நாம் போட்டியிடவுள்ளோம்.
மாற்றத்துக்கான பயணத்தில் அனைத்து தமிழ் பேசும் மக்களையும் இணைந்துகொள்ளுமாறு, நாம் அன்புடன் அழைக்கின்றோம்” என்றார்.

0 comments: