தமிழ் மக்கள் தலைநிமிர்ந்து விடுவார்கள் என அஞ்சும் சிங்கள மக்கள்

ad+1

தமிழர்களுக்கு எதுவும் வழங்கப்படக்கூடாது என்ற, சிங்கள மக்கள் ஒரு சாராரிடம் அமிழ்ந்திருக்கும் எண்ணமே புதிய அரசியல் யாப்பு பணிகளை நிறுத்துமாறு மாநாயக்க தேரர்கள் விடுத்த கோரிக்கைக்கு காரணம் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.தமிழ் மக்களுக்கு எதிரான அந்த வெறிதான் பண்டா செல்வநாயகம் உடன்பாட்டை கிழித்தெறியச் செய்யவும், டட்லி செல்வநாயகம் உடன்பாட்டை கைவிடச் செய்தமைக்கு காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.அரசியல் யாப்பை மாற்றக்கூடாதென மகா நாயக்க தேரர்கள் தற்போது வலியுறுத்தியுள்ளனர்.

எனினும் மகா நாயக்க தேரர் ஒருவர் வெளி நாட்டில் உள்ள நிலையில் இவ்வாறான தவறான செய்தியைப் பத்திரிகைகள் வெளியிட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வெளியிட்டுள்ள வாராந்த கேள்வி பதில் அறிக்கையிலேயே இதனை தெரிவித்துள்ளார்.


தமிழ் மக்களின் விடிவுக்கென ஒருவரால் நடவடிக்கை எடுக்கும் போது அதற்கு எதிர்ப்புக்காட்டி வருகின்றமை வழமையான ஒன்று எனவும் அதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஒரு விதிவிலக்காக இருந்தார் என்று கூறமுடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க 2000ஆம் ஆண்டு அரசியல் யாப்புத் திருத்தம் பற்றிப் பேசிய போது அந்தத் திருத்த ஏற்பாடுகளின் பிரதிகளை அவரின் கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தினுள்ளேயே எரித்தனர்.

அந்த வெறியை அப்போது ரணில் விக்கிரமசிங்க தமது கட்சிக்கு சார்பாகப் பாவித்தார். ஆக மொத்தத்தில் தமிழர்களுக்கு எந்த விதச் சலுகையும் அளித்து விடக்கூடாது என்பதில் சிங்களத் தலைவர்களுள் ஒரு முக்கியமான பிரிவினர் கண்ணும் கருத்துமாக இருந்து வந்துள்ளனர்.

ஆகவே இன்று அரசியல் அமைப்பில் மாற்றம் வேண்டாமென்று மகா நாயக்க தேரர்களோ வேறெந்த சிங்களத் தலைவர்களோ கோருகின்றார்கள் என்றால் அதற்கு ஒரு முக்கிய காரணம் கடந்த 1919 ஆம் ஆண்டில் இருந்து தாம் பெற்றுக் கொண்ட அரசியல் அதிகாரத்தை எவ்வகையிலும் விட்டுக்கொடுக்கக் கூடாது என்ற குறிக்கோள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிகாரம் பகிரப்பட்டால் இதுவரை சிங்கள மக்கட் தலைவர்கள் முழு நாட்டையும் ஆண்டு வந்த முறைமை இல்லாதொழிக்கப்படும்.

மீண்டும் தமிழ் மக்கள் தங்கள் தங்கள் இடங்களில் தலை நிமிர்ந்து வாழத் தலைப்பட்டுவிடுவார்கள் என்ற பயமே அவர்களின் இந்தக் கோரிக்கைக்குக் காரணம்.

அவ்வாறான கரவு எண்ணங்கள் கொண்ட பலர் இன்றும் சிங்கள மக்கட் தலைவர்களிடையே வாழ்கின்றார்கள்.

அவர்களின் சிந்தனையும் எதிர்பார்ப்புமே அரசியல் யாப்பில் மாற்றம் கொண்டு வரக் கூடாது.

தமிழர்களுக்கு ஆட்சி அதிகாரம் கொடுக்கும் போது அதனை நிர்ணயிக்கும் பொறுப்பைத் தம் வசம் வைத்துக் கொண்டே கொடுக்க வேண்டும் என்ற எண்ணமே சிங்கள மக்கள் மத்தியில் உள்ளதாகவும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

0 comments: