வடக்கு கிழக்கு இணைப்பு என்ற பேச்சுக்கே இடமிருக்கக்கூடாது! சு.க. திட்டவட்டம்

ad+1

நிறைவேற்று அதிகாரத்தை நீக்க இடமளிக்கமாட்டோம் !!

srilanka -
“நாட்டில் தற்போது அமுலிலுள்ள அரசமைப்பில் முதல் ஒன்பது உறுப்புரைகளிலும் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தக்கூடாது என்பதே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுதியான நிலைப்பாடாக இருக்கின்றது. 13ஆவது திருத்தச் சட்டத்துக்கப்பால் சென்று உச்சக்கட்ட அதிகாரம் பகிரப்படவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், வடக்கு கிழக்கு இணைப்பு என்ற பேச்சுக்கே இடமிருக்கக்கூடாது.”

இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உபதலைவரும் மூத்த அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

புதிய அரசமைப்புக்கான இடைக்கால அறிக்கை மீதான மூன்று நாள் விவாதம் அரசமைப்பு நிர்ணய சபையில் நேற்று ஆரம்பமாகியது. நாளை வரை இந்த விவாதம் தொடரும். நேற்றைய முதல் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே நிமல் சிறிபால டி சில்வா மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“அதிகாரப் பகிர்வு விடயத்தில் ஸ்ரீலங்கா சுகந்திரக் கட்சி உறுதியான நிலைப்பாட்டிலேயே அன்றுமுதல் உள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 13ஆவது திருத்தச் சட்டத்தைத் தாண்டிய அதிகாரப் பகிர்வை வழங்குவதாகக் கூறியிருந்தார். அதே நிலைப்பாட்டில்தான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இன்றும் உள்ளது.

தற்போதைய அரசமைப்பில் காணப்படும் முதல் 9 உறுப்புரைகளில் எவ்வித மாற்றத்தையும் மேற்கொள்ளப்படக்கூடாது என்பதே சு.கவின் நிலைப்பாடு. ஒற்றையாட்சி, பௌத்த மதத்துக்கான முன்னுரிமை அவ்வாறே அதன்மூலம் பேணப்படும். இது ஓர் இறுதிப்படுத்தப்பட்ட அறிக்கையல்ல. ஆகவே, மகாநாயக்க தேரர்கள் அச்சப்படவேண்டிய தேவையில்லை.

உச்சக்கட்ட அதிகாரப் பகிர்வு இடம்பெற வேண்டுமென்பதில் சு.க. உறுதியாகவுள்ளது. ஆளுநர் அதிகாரம்மிக்கவராகக் காணப்படுவதை வடக்கு, கிழக்கு முதலமைச்சர்கள் மாத்திரமல்ல, ஏனைய ஒன்பது மாகாண முதலமைச்சர்களும் சுட்டிக்காட்டியிருந்தனர்.

ஆளுநர் பிடியிலிருந்து மாகாண சபையை விடுவிக்கவேண்டும். ஆனால், வடக்கு கிழக்கு இணைப்புக்கோ அல்லது இரண்டு மாகாணங்கள் ஒன்றிணைப்புக்கோ சு.க. ஒருபோதும் அனுமதிக்காது என்பதுடன், அந்தப் பேச்சுக்கே இடமில்லை” – என்றார்.0 comments: