தமிழ் அரசியற் கைதிகளுக்கு ஆதரவாக கிழக்குப் பல்கலையில் ஆர்ப்பாட்டம்

ad+1

பல நாட்களாக உண்ணாவிரதமிருக்கும் தமிழ் அரசியற் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், அவர்களை உடன் விடுதலை செய்யக் கோரியும் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் இன்றைய தினம் (23) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் பல்கலைகழக முன்றலில் மேற்கொள்ளப்பட்டது.கிழக்குப் பல்கலைக்கழக கலைப் பீட மணவர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விசாரணையின்றி சிறைவாசம் அனுபவிக்கும் தமிழ் அரசியற் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய், அரசியற் கைதிகளின் விடுதலையைத் துரிதப்படுத்து, சட்டமா அதிபர் திணைக்களத்தின் செயற்பாடு நியாயமா? ஒளி இழந்து போகும் விழிகளுக்கு வழி காட்டுங்கள், நீதி வேண்டும் தமிழன் நீண்டு வாழ, இத்தனை வருடம் சிறையில் இருந்தும் இரக்கம் வரவில்லையா? பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கி அமைதியான, பகைமையில்லாத சூழலை உருவாக்கு, போன்ற பதாதைகளை ஏந்திய வண்ணம் கோசங்களெழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கருத்துத் தெரிவிக்கையில்,
வெகுநாட்களாக உண்ணாவிரதத்தில் ஈடுபடும் தமிழ் அரசியற் கைதிகளின் நிலைமை மிகவும் மோசமாக இருக்கின்ற இந்த தருவாயில் இவர்கள் தொடர்பில் அரசோ, தமிழ் அரசியற் பிரதிநிதிகளோ எவ்வித நடைமுறைகளை மேற்கொண்டுள்ளார்கள் எனத் தெரியவில்லை. அவர்களின் விடுதலை கோரியும், அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாகவும் கிழக்குப் பல்கலைக்கழ மாணவர்களாகிய நாங்கள் இந்த ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டிருக்கின்றோம்.

அரசியற் கைதிகளின் நியாயமான கோரிக்கையை இந்த அரசு ஏற்று அவர்களுக்கு உரிய நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என்பதுடன் அவர்களின் விடுதலைக்கான செயற்பாடுகளையும் துரிதகதியில் மேற்கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டனர்.

0 comments: