முந்தனையாறு திட்டம் தொடர்பில் பங்குதாரர்களுக்கான செயலமர்வு

ad+1

முந்தனையாறு அபிவிருத்தித்திட்டம் தொடர்பில் திணைக்களத் தலைவர்கள் உள்ளிட்ட பங்குதாரர்களுக்கான செயலமர்வொன்று மட்டக்களப்பு மாவட்ட பதில் அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஸ்பகுமார தலைமையில்  திங்கட்கிழமை (16) பகல் நடைபெற்றது.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இச் செயலமர்வில், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன், பிரதேச செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், உதவித்திட்டமிடல் பணிப்பாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.


முந்தனையாறு அபிவிருத்தித் திட்டத்துக்கென 145 பில்லியன் அமெரிக்க டொலர்களை உலக வங்கி ஒதுக்கியிருக்கிறது. இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதன் மூலம் மாவட்டத்திலுள்ள பெரும்பாலான பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய இச் செயலமர்வில், முந்தனையாறு திட்டத்தின் நடைமுறைப்படுத்தல், கிறிப் திட்டத்தின் முக்கியத்துவம், பூகோள வெப்பமாதலில் முந்தனையாறு திட்டத்தின் முக்கியத்துவம், மட்டக்களப்பு மாவட்டத்தின் வெள்ளத்தடுப்பு, வரட்சித்தணிப்பு உள்ளிட்ட பல்வேறு விடங்களுக்கு விளக்கங்கள் வழங்கப்பட்டன.
இன்றைய தினம் தொழில்நுட்பவியல் சுற்றாடல் ஆய்வு  தொடர்பான விளக்கங்கள் பங்குதார்களுக்கு வழங்கப்பட்டது.

இந்த விளக்கங்களை கிரிப் திட்டத்தின் தொழில்நுட்பவியல் சுற்றாடல் ஆய்வுக் குழுவின் தலைவி ரமணி எல்பொட, நீர்வள ஆய்வு நிபுணர் டி.ஏ,ஜே.ரண்வல ஆகியோர் வழங்கினர். இத்திட்டத்தின் உறுப்பினர்களான பிராந்திய அபிவிருத்தி திட்டமிடலாளர், கரையோர பொறியியலாளர்கள், விவசாய விற்பன்னர்கள், உள்ளிட்ட பலரும் இத்துடன் இணைந்திருந்தனர்.

முந்தனையாறு திட்டமானது, இலங்கையிலிருந்து உலக வங்கிக்கு முன்வைக்கப்பட்ட 7 திட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட இரண்டில் ஒன்றாகும். மட்டக்களப்பு மாவட்ட செயலத்தினால் முன்வைக்கப்பட்ட முந்தனையாறு அபிவிருத்தித் திட்டம் மூலமாக இந்த அனுமதி கிடைக்கப்பெற்றிருந்தது.

இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் மாவட்டத்தில் வருடா வருடம் ஏற்படுகிற வெள்ளம்  தடுக்கப்படும். குடிநீர்ப்பிரச்சினை, வரட்சி, ஆற்றுவாய்களின் பிரச்சினைகள், வாழ்வாதாரப்பிரச்சினைகள் என 98 வீதமான பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
0 comments: