‘அரசியல் கைதிகள் விடயத்தில் ஜனாதிபதி பின்வாங்குகின்றார்’

ad+1

“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வடக்கு வரும்போது நியாயமாக நடந்துகொள்பவர் போன்று பேசிக்கொள்கின்றார். ஆனால், கொழும்பு திரும்பியதும் அரசாங்கத்துக்குள்ளும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியிலும் இருக்கும் பேரினவாத கடும்போக்காளர்களுக்கு முகங்கொடுக்க முடியாது பின்வாங்கிக்கொள்கின்றார்”என, புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி தெரிவித்துள்ளது.


இதன்மூலம், தமிழ் மக்களுக்கு ஒரு முகத்தையும், பேரினவாதிகளுக்கு வேறொரு முகத்தையும் காட்டவேண்டிய நிலையில் நிறைவேற்று அதிகாரமுள்ளவரான ஜனாதிபதி இருந்து வருவதைக் காணமுடிகின்றது எனவும் அக்கட்சி தெரிவித்துள்ளது.

இடம்பெற்றுவரும் தமிழ் அரசியல் கைதிகளின் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தை ஆதரித்து, புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி அரசியல் குழுவின் சார்பாக பொதுச் செயலாளர் சி.கா. செந்திவேல் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், யாழ்ப்பாணத்தில் நாளை மறுதினம் நடைபெறவுள்ள கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றுக்கும் அக்கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

‘தமது வழக்குகளை மீளவும் வவுனியா நீதிமன்றத்தில் விசாரிக்கக் கோரி, கடந்த மாதம் 27ஆம் திகதி முதல், அநுராதபுரம் சிறைச்சாலையில் மூன்று தமிழ் அரசியல்கைதிகள் முன்னெடுத்து வரும் உணவுத் தவிர்ப்புப் போராட்டம் முற்றிலும் நியாயமானதாகும்.

“உயிராபத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் இம் மூன்று அரசியல் கைதிகளையும் அரசாங்கமும் ஜனாதிபதியும் பாதுகாக்க வேண்டும். இவ் அரசியல் கைதிகளின் உயிர்கள் பறிக்கப்படுவதை எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியாது.

“சட்டபூர்வமாகவும் நியாயத்தின் அடிப்படையிலும், மனித உரிமைகளின் அடிப்படையிலும் இம் மூன்று தமிழ் அரசியல் கைதிகளினதும் உணவுத் தவிர்ப்புப் போராட்டக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவேண்டியது அவசியம்.

“எனவே, இப்பிரச்சினையை ஆளும் வர்க்க பேரினவாத நிலைப்பாட்டில் இருந்து நோக்காது, சட்டம், நீதி, மனிதாபிமான அடிப்படையில் அணுகித் தீர்க்கப்படவேண்டும்.

“அரசியல் கைதிகளின் விடயத்தில் சரியானதும் உறுதியானதுமான முடிவை மேற்கொண்டு, உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அரசியல் கைதிகளின் உயிர்களைப் பாதுகாக்க வேண்டுமென எமது கட்சி வலியுறுத்துகின்றது.0 comments: