சவுக்கடி இரட்டைப் படுகொலை: பரிசோதனையின் பின் சடலங்கள் நல்லடக்கம்

ad+1

 சவுக்கடி கிராமத்தில் தீபாவளித் தினத்தன்று (18) படுகொலை செய்யப்பட்ட இளவயதுத் தாய் மற்றும் அவரது 11 வயது மகன் ஆகியோரின் சடலங்கள், சட்ட வைத்திய அதிகாரியின் உடற் கூற்றுப் பரிசோதனையின் பின்னர் சவுக்கடி பொது மயானத்தில் சனிக்கிழமை (21) நல்லடக்கம் செய்யப்பட்டன.


சட்ட வைத்திய அதிகாரியின் உடற் கூற்றுப் பரிசோதனை அறிக்கைக்காக, சடலம் கடந்த 18ஆம் திகதியன்றே, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

கடந்த வெள்ளிக்கிழமை (20​), சட்ட வைத்திய அதிகாரி இனோக்கா எல். ரத்னாயக்க உடற் கூற்றுப் பரிசோதனையை மேற்கொண்டதன் பின்ன,ர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

சவுக்கடி, முருகன் கோயில் வீதியைச் சேர்ந்த மதுவந்தி பீதாம்பரம் (வயது 26) மற்றும் அவரது மகனான பீதாம்பரம் மதுஷ‪ன் (வயது 11) ஆகியோரே படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள்.

வழமைபோன்று நித்திரைக்குச் சென்றவர்கள் புதன்கிழமை காலை 9 மணியாகியும் தாய், மகன் ஆகியோரின் ஆளரவம்  ஏதும் இல்லாதிருந்ததை அறிந்த உறவினர்கள், சந்தேகத்தின் பேரில் வீட்டுக்குள்  பார்த்தபோது வீட்டுக்கு கதவு திறந்த நிலையில் இருந்த அதேவேளை, தாயும் மகனும் இரத்தவாறாக கட்டிலில் இறந்து கிடந்துள்ளனர்.

பின்னால் வந்து வீட்டுக் கூரையை பிரித்து உள்ளிறங்கிய நபர்களே இந்தப் படுகொலையைப் புரிந்துள்ளனர்.

உடனடியாக ஸ்தலத்துக்கு விரைந்த துப்பறியும் பொலிஸாரும் மோப்ப நாய்ப் பிரிவினரும் விசாரணைகளை முடுக்கி விட்டதோடு சம்பவத்துடன் தொடர்புடையதான சந்தேகத்தின் பேரில் மூவர் கைதுசெய்யப்பட்டனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரையும், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக நீதிபதி எம்.ஐ.எம்.றிஸ்வி முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது, எதிர்வரும் நவம்பர் மாதம் 01ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவன், கடந்த 7 வருடங்களாக குவைத் நாட்டில் தொடர்ச்சியாக தொழில் புரிந்து வந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை நாடு திரும்பியவுடன் ஏறாவூர் பொலிஸ் நிலையத்துக்கு வரவழைக்கப்பட்டு, வாக்குமூலம் பெறப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தக் கொலைச் சம்பவத்துடன் தங்க நகைகள் மற்றும் பணம் திருட்டு உட்பட்ட குற்றச் செயல்களை அடிப்படையாகக் கொண்டு பல கோணங்களில் பொலிஸார் தமது விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

0 comments: