தமிழர் தாயகம் அங்கீகரிக்கப்பட்ட அரசியலமைப்பு இலங்கையில் உருவாக்கப்பட வேண்டும்

ad+1

வட, கிழக்கு இணைந்த தமிழர் தாயகம் அங்கீகரிக்கப்பட்ட சுயாட்சியை ஏற்றுக்கொண்ட அரசியலமைப்பு இலங்கையில் உருவாக்கப்பட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி நகர வர்த்தகர்களுடனான கலந்துரையாடல் இன்றைய தினம்(21) மாலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்டக் காரியாலயமான அறிவகத்தில் நடைபெற்றது.


இங்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

தமிழ் பேசும் மக்கள் மிகுந்த அவதானமாக இருக்க வேண்டும். இலங்கை நாடானது பல்லின மக்களைக் கொண்டுள்ள ஒரு நாடாகும்.

நாட்டில் வாழும் சகல இனத்தவர்களும் இந்நாட்டுப் பிரஜைகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டு அவர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளப்பட்ட வகையிலான அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.

இங்கு வாழும் இனத்தவர்களையோ அல்லது ஒரு மதத்தவர்களையோ முதன்மைப்படுத்தி ஏனையவர்களை சிறுமைப்படுத்தி உரிமைகளை மறுக்கின்றதாக அரசியலமைப்பு அமையக்கூடாது.

நாட்டில் வாழும் மக்களது அமைதிக்கும், நிலைத்திருப்புக்கும் சகல இன மக்களையும் கருத்தில்கொண்டு அவர்களுக்குரிய உரிமைகளை வழங்கக்கூடிய வகையிலமைந்த அரசியல் யாப்பு உருவாக்கப்பட வேண்டும்.

ஒரு இனத்தையும் மதத்தையும் முதன்மைப்படுத்தி இன்னொரு இனமக்களை அடக்கி ஒடுக்கி அடிமைப்படுத்த முற்பட்டதன் விளைவே இந்நாட்டின் இனப்பிரச்சினைக்கான முக்கிய காரணமாக அமைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

0 comments: