‘கொழுக்கட்டை இப்போது மோதகமாக மாற்றம் செய்து வந்துள்ளது'

ad+1

“வடமாகாண சபையின் அமைச்சரவை மாற்றப்பட்ட பின்னரும் மாற்றங்கள் எதனையும் காணவில்லை. குறைந்தபட்சம் மாற்றங்கள் நிகழ்வதற்கான சமிக்ஞைகள் கூடத் தெரியவில்லை” எனத் தெரிவித்த,அச்சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா, “அமைச்சரவை மாற்றம் தொடர்பாக சுருக்கமாகக் கூறினால், முன்னர் கொழுக்கட்டை சாப்பிட்டோம், இப்போது மோதகம் சாப்பிடுகிறோம். அதுவே வித்தியாசம்” என்றும் தெரிவித்துள்ளார். 

சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பாக யாழ்.ஊடக அமையத்தில் நேற்று (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசாவிடம் வடமாகாண அமைச்சர் சபை மாற்றம் செய்யப்பட்டதன் பின்னர் வடமாகாண சபையின் செயற்பாடுகள் தொடர்பாக ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அக்கேள்விக்கு அவர் மேலும் பதிலளிக்கையில், “வடமாகாணசபையின் முதலமைச்சர் தவிர்ந்த மற்றய அமைச்சர்கள் அனைவரும் எனக்கு நெருங்கிய நண்பர்கள். ஆனால், அமைச்சர் சபை மாற்றம் செய்யப்பட்டதன் பின்னர் பாரிய மாற்றங்கள் உருவாகியிருக்கின்றன என சொல்ல இயலாது. வெளிப்படையாகச் சொன்னால் மாற்றங்கள் அல்ல மாற்றங்கள் நிகழ்வதற்கான சமிக்ஞைகள் கூடத் தெரியாத நிலையே காணப்படுகின்றது.  “இதனை விடவும் வெளிப்படையாகச் சொன்னால் முன்னர் கொழுக்கட்டை சாப்பிட்ட நாங்கள் இப்போது மோதகம் சாப்பிடுகிறோம். உள்ளடக்கத்தில் ஒரு மாற்றமும் இல்லை. உருவம் வேறு” எனக் கூறினார்.  

“மேலும், வடமாகாணசபையின் ஆக்கபூர்வமான செயற்பாட்டுக்காக, சில செயற்றிட்டங்கள் மற்றும் நியதிச்சட்டங்களை துறைசார் வல்லுநர்களைக் கொண்டு உருவாக்கி, முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றேன்” என்றார்.

0 comments: