சவுக்கடி தாய், மகன் படுகொலை பிரதான சந்தேக நபர் 10 தினங்களின் பின்னர் கைது

ad+1

தீபாவளித் தினத்தன்று 18.10.2017 ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள சவுக்கடி கிராமத்தில் படுகொலை செய்யப்பட்ட இளவயதுத் தாய் மற்றும் அவரது 11 வயது மகன் ஆகியோரின் படுகொலையின் பிரதான சூத்திரதாரியென சந்தேகிக்கப்படும் நபர் ஞாயிற்றுக்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


தீவிரமான தொடர்ச்சியான புலன் விசாரணைகளையடுத்து நாட்டை விட்டுத் தப்பியோடும் பிரயத்தனத்தில் இருந்த சந்தேக நபரைச் சிக்க வைத்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

முன்னாள் இயக்கம் ஒன்றின் உறுப்பினரான இந்நபர் பல பிரதேசங்களை மாறி மாறி தனது வசிப்பிடமாகக் கொண்டிருப்பதான தகவல் தமக்குக் கிடைத்திருந்ததாகவும் அதற்கமைவாக அவரது நடமாட்டமுள்ளதாக அறியப்பட்ட சகல இடங்களும் நோட்டமிடப்பட்டதாகவும் அதனடிப்படையிலேயே சந்தேக நபர் சிக்கியதாகவும் பொலிஸார் கூறினர்.

சந்தேக நபருடன் வலைப்பின்னலில் மேலும் சில சகாக்கள் ஈடுபட்டுள்ளனரா என்ற விசாரணைகளிலும் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

சவுக்கடி முருகன் கோயில் வீதியைச் சேர்ந்த மதுவந்தி பீதாம்பரம் (வயது 26) மற்றும் அவரது மகனான பீதாம்பரம் மதுஷ‪ன் (வயது 11) ஆகியோரே படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

இப்படுகொலையுடன் சம்பந்தமான விசாரணையில் ஏற்கெனவே சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டு நொவெம்பெர் 01ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவம் தொடர்பாக இதுவரை 80 இற்கு மேற்பட்டவர்களிடம் விசாரணை நடைபெற்றுள்ளதுடன் 27 பேரிடம் வாக்குமூலமும் பெறப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக ஏறாவூர், மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸாரும், மட்டக்களப்பு பொலிஸ் தலைமையக பொலிஸாரும், பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரும் தொடர்ந்து விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.0 comments: